Skip to content

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்.12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது அதில் பழுப்பு நிற டேப் சுற்றப்பட்ட 310 பாக்கெட்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. லாரியின் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திர பதிவு எண் கொண்ட லாரிக்கு, தமிழக பதிவு எண்ணை ஒட்டி, பயன்படுத்தியது தெரிந்தது. இது தொடர்பாக லாரியில் இருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணன் (43), தவமணி (38), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் (39), பரமானந்தம் (47), செல்வராஜ் (58), ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ரமணன் மற்றும் தவமணி இருவரும் ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்.6ம் தேதி லாரியில் கஞ்சாவை எடுத்து வந்தனர். பிறகு ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகியோருடன் இணைந்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக 310 பொட்டலங்களில் இருந்த 661.50 கிலோ கஞ்சாவை பங்கு பிரித்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பான  வழக்கு  விசாரணை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்  நடந்து வந்தது.  நீதிபதி ஜி.சுந்தரராஜன் வழக்கை விசாரித்து,  கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ரமணன், தவமணி, ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!