Skip to content
Home » திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தலை தூக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில் திருச்சி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான லாட்டரி அதிபர் மனோகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை ,தில்லை நகர் ,உறையூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த சோதனையில் 20 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர் .இதில் உறையூர் பகுதியில் பிடிபட்ட செந்தில்குமரன் என்பவரிடம் 4,92,100 ரூபாய் பணம் கட்டு, கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் கைதான மற்றவர்களிடமிருந்து10 செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திருச்சி மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இனியும் லாட்டரி விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கைதான சிலர் லாட்டரி விற்றதுடன் பரிசுத்தொகை விழுந்தவர்களுக்கு பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பரிசுத்தொகை கிடைத்தவர்கள் ஏமாற்றப்பட்டு, அந்தந்த சரக போலீசில் புகார் அளித்ததன் பேரில் இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வீரையன் கோட்டை சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் அண்ணாமலை.இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தந்தை பெயர், பிறந்த தேதி,அவருடைய பெயர் ஆகியவற்றை மாற்றி போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது.இதனை அடுத்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரி முகேஷ் ராம் கௌதம் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்…

திருச்சி சர்க்கார் பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் நாகநாதன் .இவரது மகன் யுவராஜ் (வயது 19). இவர் தனது நண்பர் தருண் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி ஓடத்துறை ரயில்வே தண்டவாளம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் இவர்களை மறித்து ஏன் வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறியது .இதில் குடி போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் யுவராஜ், தருண் மீது உருட்டு கட்டையால் தாக்கி கற்களை வீசினர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி குடிபோதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 3 பேர் இலங்கைக்கு அனுப்பி வைப்பு..

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தஇலங்கை தமிழர்களான முகமது சாகிப், அவரது மனைவி பாத்திமா மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளையும், இலங்கைக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்குச் சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து என கூறி இலங்கைக்குச் செல்ல அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று பேரையும் வலுக்கட்டாயமாக திருச்சி விமான நிலையத்திற்கு காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

என்ஜினீயர், வழக்கறிஞர் அலுவலகங்களில் கொள்ளை…

திருச்சி, பீம நகர், ஹீபர் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் கரூரைச் சேர்ந்த இன்ஜினியர் பழனி வேலு( 32) என்பவருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகம் உள்ளது. நேற்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந நிலையில் மர்ம நபர்கள் அவரது அலுவலக பூட்டை உடைத்து லேப்டாப்பை திருடி சென்று விட்டனர்.

இதேபோன்று அந்த வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வரும் அமுதா என்பவரது கடை மற்றும் வழக்கறிஞர் ஆனந்த் அலுவலக பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து பழனிவேலு செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்