சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நடந்தது. இதில், வானிலையால் தூண்டப்பட்ட பேரிடர்களால் ஏற்பட்ட மனித மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய புதிய ஆய்வுகளை உலக வானிலை அமைப்பு வெளியிட்டது. இதில் அறிக்கையை வெளியிட்டு அந்த அமைப்பின் பொது செயலாளர் பெத்தேரி தாலஸ் பேசினார். அவர் கூறும்போது, குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை, அவர்களது பொருளாதாரத்துடன் ஒப்பீட்டளவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. துரதிர்ஷ்டவசத்தில் வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்புடைய தீங்குகளை, அழிவு நிலையிலுள்ள பல சமூகங்கள் தாங்கி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளில், கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுவே, வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளில் 5 பேரிடர்களில் ஒன்றானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சில பேரிடர்களால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முழுவதும் கூட அழிந்து போயுள்ளன. உலகம் முழுவதும் தீவிர வானிலையால் கடந்த 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர். அதிக அளவாக ஆசிய நாடுகள் பாதிப்பை கண்டு உள்ளன. இதன்படி 10 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வங்காளதேச நாட்டினர் ஆவர்.
ஆப்பிரிக்காவில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேர் பருவநிலை பேரிடரால் உயிரிழந்து உள்ளனர். இதில் 95 சதவீதம் வறட்சி நிலையால் ஏற்பட்டவை ஆகும் என அறிக்கை தெரிவிக்கின்றது. உலகம் முழுவதும் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்புடைய தீங்குகளால் 12 ஆயிரம் பேரிடர்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பருவநிலை அதிர்ச்சிகள் மற்றும் தீவிர வானிலையால், 10-ல் 9 பேரும், 60 சதவீத பொருளாதார பாதிப்புகளையும் அந்த நாடுகள் சந்தித்து உள்ளன. 50 ஆண்டுகால தீவிர வானிலை நிகழ்வுகளால், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதல் ஆகியவற்றால், 20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபோக, இந்திய மதிப்பில் ரூ.356 லட்சம் கோடி பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.