கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை பார்ப்பதற்காக கரூர் வந்த நிலையில் நேற்று மூன்று இளைஞர்களும் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் முதலில் குளிப்பதற்காக நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான இடத்திற்கு சென்றதால் நீர் இழுத்துச் சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவர் உடல்களையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.