Skip to content

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம் தேதி இருவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விசேஷத்திற்காக தான் அணிந்திருந்த எட்டரை பவுன் பெரிய தங்க காசு மாலை, மூன்றரை பவுன் சின்ன தங்க காசு மாலை ஆகியவற்றை ஒரு பெட்டியில் வைத்து தனது டிராவல் பேக்கில் அன்னலட்சுமி வைத்திருந்தார். தஞ்சாவூர் நியூ பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பின்னர் தங்களின் ஊருக்கு செல்வதற்காக இருவரும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் ஊரில் இறங்கி வீட்டிற்கு சென்ற அன்னலட்சுமி டிராவல் பேக்கை பார்த்தபோது அதில் இருந்த நகைகளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமி பயணம் செய்த தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அன்னலட்சுமி அருகில் வைத்திருந்த ட்ராவல் பேக்கில் இருந்து ரெண்டு பேர் நகைப்பெட்டியை திருடிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்குவது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் மேலூர், சொக்கம்பட்டி பாரதியார்புரத்தை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவரின் மகன் சண்முகம் (26), விருதுநகர் அருப்புக்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கண்ணன் என்கிற சித்திக் (23) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், காவலர்கள் புவனேஷ், ரஞ்சித், பிலி ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மதுரை மற்றும் விருதுநகர் பகுதியில் மறைந்திருந்த சண்முகம், கண்ணன் ஆகிய இருவரையும் பிடித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் இருவரும் பேருந்துகளில் தனியாக பயணிக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து நகை, பணம், கைப்பை போன்றவற்றை திருடிச் செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 பவுன் நகைகளையும் மீட்டனர்.

error: Content is protected !!