அரியலூர் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து விடுகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் ஷெட் அமைத்து, அதில் ஆடுகளை அடைத்து வைத்து, பகலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை ஷெட்டில் அடைத்து வைத்துவிட்டு, தூங்க சென்று விட்டார். திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, ஷெட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டு வாலிபர்கள் ஆடுகளை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களை துரத்திய முருகானந்தத்தால், பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருமானூர் காவல் நிலையத்தில், முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திருமானூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் ஆடுகளை கொண்டு வந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு முரணாக பதில் கூறிய தால் சந்தேகம் அடைந்த போலீசார், காவல் நிலையம் அமைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது ஆடுகளை திருடி வருவதை ஒத்துக் கொண்டனர். மேலும் விசாரணையில், அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தை சேர்ந்த உத்தமராசா மற்றும் முத்தையா என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.