திருச்சியில் பெண்ணிடம் நகைப் பறித்த நபர்களை அடுத்த சில மணி நேரத்தில் போலீஸôர் கைது செய்தனர்.
திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் சாந்தா (78). இவர் நேற்று காலை திருச்சி மன்னார்புரம் அருகே இந்தியன் வங்கி காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மகனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம ஆசாமிகள் சாந்தா அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை திடீரென பறித்துச் கொண்டு மின்னல் வேகத்தில் டூவீலரில் சென்றனர். இதையடுத்து உடனடியாக இந்த சம்பம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில், நகைப்பறித்தவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் திடீரென போலீசார் வாகன சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில், திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்கிற ஏழுமலை (28), எஸ். வேலுசாமி (48) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அடுத்த சில மணி நேரத்தில் அவர்களை வாகன சோதனையில் பிடித்து கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டு, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.