திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். அவர் தடைசெய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று அருவியல் குளித்துள்ளார். அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக தனது ஊரில் உள்ள நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி அங்குள்ள 70 அடி பள்ளத்தில் விழுந்து குணால் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் சேலம் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த் (23), நிதிஷ்காந்த் (21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். அப்போது அங்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து சென்றபோது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து நிதிஷ்காந்தை மீட்டு சேம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.