நடிகர் சூர்யா- இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ‘சூர்யா 44’ படத்திற்காக முதல் முறையாக இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில், இதுகுறித்து கிசுகிசுவாக கூட எந்தத் தகவலும் முன்பு வரவில்லை. இந்த காம்போவை இத்தனை நாள்கள் வெளியில் சொல்லாமல் இருந்தது ஏன் என படத்தின் தயாரிப்பாளர் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார்.
’கங்குவா’ படத்தின் மொத்தப் பணிகளையும் முடித்துவிட்டு அதன் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யாவின் அடுத்தப் படம் என்ன என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை2’ படத்தில் பிஸியாக இருப்பதால் ‘வாடிவாசல்’ தொடங்க வாய்ப்பில்லை என்பது உறுதி. அதுமட்டுமல்லாது, இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் எனவும் சொல்லப்படுகிறது.
மற்றொரு படமான சுதா கொங்கராவுடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ள ‘புறநானூறு’ படத்தின் திரைக்கதைக்கு அதிக காலம் தேவைப்படுவதால் தாமதமாகதான் தொடங்கும் என படக்குழு அறிவித்தது. இப்படியான சூழ்நிலையில்தான் ‘சூர்யா44’ என இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்- சூர்யா முதன் முறையாக இணையும் படம் அறிவிக்கப்பட்டது. ’இது நம்ம லிஸ்ட்டலயே இல்லையே…’ என இந்த காம்போ பல ரசிகர்களின் புருவங்களையும் உயர்த்த வைத்தது.
ஏனெனில், இந்தத் தகவல் அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ளப் பேட்டியில், “சமீப காலங்களாக திரைத்துறையில் பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் எப்படி இருந்தாலும் கசிந்து விடுகிறது. அதனால், இந்த தகவலும் அப்படி கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். படம் அறிவிப்பதற்கான சரியான நேரம் வரும் வரைக் காத்திருந்தோம். இந்தப் படத்திற்காக, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சூர்யா- கார்த்திக் சுப்பாராஜ் இடையே டிஸ்கஷன் போனது. சூர்யா சாருக்காகவே இந்தப் படம் உருவாக்கப்பட்டது” என்றார்.