Skip to content
Home » திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் திட்டங்கள்:

சென்னை – நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரெயில் சேவை நடைபெறும்.

பெங்களூரு – மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும்.  சென்னை சென்ட்ரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பான விவரம் இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எழும்பூர் – நாகர்கோவில் (20627- 20628) இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இருக்கும்.

இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள்ஏ.சி. சேர் காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரெயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ஒரேநாளில் சென்னையில் இருந்து நாகர்கோவில்சென்று மீண்டும் சென்னை  திரும்பும் வகையில்  இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரெயில் சேவை இருக்கும்.

இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு (20671-20672) வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரெயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். . இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும்.

புதிதாக இயக்கப்பட உள்ள 2 வந்தேபாரத் ரயில்களும் திருச்சி வழியாக செல்கிறது. திருச்சியில் நின்று செல்வதால் திருச்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *