திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் +2 மாணவி (16). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி மாணவி காணாமல் போனார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது அங்கிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் தஞ்சாவூர் மாவட்டம், மருங்குணம் வள்ளலார் நகரை சேர்ந்த விக்னேஷ் (21), சேத்துப்பட்டில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்ததும் தெரியவந்தது. பிளஸ் 2 மாணவியும், அதே பகுதி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்த விக்னேஷூம், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியுடன் காதல் ஏற்பட்டு அவரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.