தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த ஜனவரி 1ம் தேதி ஸ்கூட்டியில் வந்த ரம்யா என்ற பெண்ணை வழிமறித்த 4 பேர் அடங்கிய கும்பல் அவரிடமிருந்து தங்க செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து வல்லம் போலீசில் ரம்யா புகார் செய்தார்.வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் போலீஸ்காரர்கள் புவனேஸ், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு பைக்குகளில் ரம்யாவை பின்தொடர்ந்து வந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வழிபறியில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தன் மகன் கபினேஷ் (21), தஞ்சாவூர் நாவலர் நகரை சேர்ந்த கணேசன் மகன் ரவிச்சந்திரன் (23) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கபினேஷ் மற்றும் ரவிச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வல்லம் டிஎஸ்பி நித்யாவின் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்ததை பொதுமக்கள் பாராட்டினர்.