அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் தொடர்புடையதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி சார் என யாரிடமோ பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் இரண்டு மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. தடயவியல் துறை துணை இயக்குனர் சோபியா, உதவி இயக்குனர் நளினி நடராஜன், தொழில் நுட்பபிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். ஞானசேகரனை பல வகையாக பேச சொல்லி அவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்து கொண்டனர். இரண்டு மணி நேர சோதனைக்கு பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டார். குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான அறிக்கை விரைவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தடய அறிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்