பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024) தொடங்கி 22.03.2024 அன்று முடிவுபெறவுள்ளது. 35 தேர்வு மையங்களில் 79 மேல்நிலைப்பள்ளிகளைச்சேர்ந்த 3,558 மாணவர்கள், 3,536 மாணவிகள் என மொத்தம் 7,094 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இவர்களின் இன்றைய தேர்வில், 3,501 மாணவர்கள், 3,501 மாணவிகள் என மொத்தம் 7002 மாணவ மாணவிகள் இன்றைய தேர்வை எழுதினார்கள். 58 மாணவர்கள் மற்றும் 34 மாணவிகள் என 92 மாணவ மாணவிகள் தேர்வெழுதவரவில்லை. 57 தனித்தேர்வர்களில் 55 தனித்தேர்வர்கள் இன்றைய தேர்வெழுதினர்.
இந்நிலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தேர்வர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், இன்றைய தேர்விற்கு வராத மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் தகவல்கள், அவர்கள் ஏன் தேர்வெழுத வரவில்லை என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்விலும் தேர்வெழுத வராத மாணவ மாணவிகள் குறித்த தகவல்களும் விபரங்களும் சேகரிக்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உடனிருந்தார்.