சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்ற நேகா (7), அக்ஷரா (5) என 2 மகள்கள் இருந்தனர்.
மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் நிதிஷாக்கு இன்சுலின் ஊசி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அக்ஷராவை தந்தை யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அதில் அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
தனது 2 மகள்களுக்கும் தீராத சர்க்கரை நோய் வந்துவிட்டதே என்று எண்ணி வருந்திய யுவராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்கு சென்று மனைவி மான்விழியிடம் 2-வது மகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மான்விழி மனம் நொந்து போனார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தனர்.
இதையடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ், தனது மனைவி மான்விழி மற்றும் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அடுத்த கொளத்தூர் கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து கனத்த மனதுடன் 2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசினர். இதில் 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் யுவராஜ், மான்விழி ஆகியோரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.