சென்னை குன்றத்தூரில் எலி மருந்து வைத்து 2 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் வீட்டில் அளவுக்கதிகமான மருந்து வைக்கப்பட்டது தடயவியல் துறையினரின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குன்றத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிரிதரன் எலி தொல்லை காரணமாக படுக்கை அரை உள்பட வீட்டில் பல பகுதிகளில் எலி மருந்து வைத்துள்ளார். பெஸ்ட் கண்ட்ரோல் என்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் மருந்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் மருந்து வைத்த தனியார் நிறுவன ஊழியர் தினகரன் என்பவரை குன்றத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர நிறுவனத்தின் நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் துறை உதவி இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர் அப்போது வீட்டில் அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டதே காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
எலி உள்ளிட்ட பூச்சிகளுக்காக வீடுகளில் மருந்துகள் பயன்படுத்தும் போது வீட்டின் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைத்திருப்பதும் குறைந்தது ஒரு நாளைக்கு அந்த வீட்டில் வசிக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் இது போல் எலி, கரையான் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கப்பட்ட வீடுகளில் ஏசியை போட்டு கதவை மூடிவிட்டு உறங்குவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். எலியை கட்டுப்படுத்த வீட்டில் வைத்த எலி மருந்து 2 குழந்தைகளின் உயிரை பறித்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.