திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ராமச்சந்திரா நகரை சேர்ந்த ரகீம் என்பவரது மகன் சையத் கமருதீன்(11), இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பீர்முகமது மகன் முகமது காஜில் (8). இவர்கள் இருவரும் முறையே 6, 3ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்து வந்ததும் சைக்கிளில் அருகில் உள்ள சாத்தனூர் பெரிய குளத்திற்கு குளிக்கச்சென்றனர்.
இது குறித்து அவர்கள் பெற்றோரிடமும் கூறவில்லை. இரவு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. எனவே பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் ஊர் முழுவதும் தேடினர். அப்போது சாத்தனூர் பெரியகுளம் அருகே சிறுவர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.
எனவே குளத்தில் தான் அவர்கள் மூழ்கி இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் குளத்தில் இறங்கி தேடினர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தேடியபோது சிறுவர்கள் இருவரின் சடலங்களும் குளத்துக்குள் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.