தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்துள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, மாணவி தன்னிடம் இரண்டு பேர் தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
உடனே, பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் தொல்லைக்கு ஆளாகியது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். போலீசார் சிறுமியிடம் விசாரித்த நிலையில், ராஜேந்திரன் மகன் ராஜேஷ்,35, கருப்பன் மகன் முகிலரசன்,40, இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், ராஜேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல், முகிலரசனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்தார். மேலும், அப்பகுதி சிறுவர்கள், சிறுமிகளுக்கு நொறுக்கி தீனி அவ்வப்போது வாங்கிக்கொடுத்து பேசி வருவது வாடிக்கை. அத்துடன் பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்தும் வந்துள்ளனர்.அப்படியாக, 10 வயது சிறுமிக்கும் அடிக்கடி நொறுக்கி தீனியை வாங்கிக்கொடுத்து, ராஜேஷ் மற்றும் முகிலரசன் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தெரியவந்தது. இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார், ராஜேஷ், முகிலரசன் இருவரும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.