காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய வருமான வரித்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனி அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை பெறப்பட்ட 13,000 கோடி ரூபாய் மொத்த நன்கொடையில் ரூபாய் 6572 கோடியை பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரிய தீர்ப்பாகும். இதை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு அகில இந்திய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது.
இதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டின் மீது, வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிபந்தனையுடன் ஆணையிட்டுள்ளது. ஆனால், அந்த நிபந்தனையின்படி ரூபாய் 185 கோடிக்கு மேல் இருக்கும் டெபாசிட் தொகையைத் தான் காங்கிரஸ் கட்சி பயன்படுத்த முடியும். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகை ரூபாய் 185 கோடிக்கு குறைவாக இருப்பதால் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை தொடர்கிறது. இந்த நிபந்தனைக்கு காரணம் 2018-19 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி காலம் தவறி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் ரூபாய் 210 கோடியை வருமான வரித்துறை அநியாயமாக அபராதமாக விதித்திருக்கிறது. காலம் தாழ்ந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததற்காக பெரும் தொகையை அபராதமாக விதித்து, அதற்கு இணையாக காங்கிரசின் வங்கி கணக்குகளை முடக்குவதை விட ஒரு கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பா.ஜ.க. அரசுக்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள முடியாமல் விழி பிதுங்கி நிற்கிற வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோத, பாசிச அடக்குமுறை நடவடிக்கையாகும். சட்டவிரோதமாக 6500 கோடி ரூபாய் நிதி குவித்த பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு பதிலாக, பெருந்திரளான மக்களிடம் சட்டபூர்வமாக நிதி பெற்று வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட தொகையை பயன்படுத்த முடியாத நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பணியாளர்களுக்கு சம்பளம், மின்சார கட்டணம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளுக்கு கூட வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரசின் வங்கி கணக்கை முடக்குவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளின் மூலமாக காங்கிரஸ் கட்சியை முடக்கி விட முடியாது என தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை எச்சரித்திருக்கிறார்.
தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக, ரூபாய் 1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6812. இதன்மூலம் ரூபாய் 6812 கோடி நன்கொடையை வழங்கியது யார் ? இந்த கார்ப்பரேட்டுகள் யார் ? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்களுக்கு பா.ஜ.க. செய்த உதவி என்ன ? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. செய்த சட்டவிரோத உதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா ? இதன்மூலம் தேர்தல் களத்தில் சமநிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதி வழங்கினாலும், மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ, அந்த அலுவலகத்திற்கு முன்பாக வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்று, மோடி அரசின் பாசிச, ஜனநாயக விரோத போக்கை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.