சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரை சேர்ந்த சாகுல்ஹமீது (59) என்பவர் சுற்றுலா விசாவில் கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தபோது பெரிய பார்சல் ஒன்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து, இந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 19 கிலோ எடையுள்ள மருத்துவ குணம் வாய்ந்த சுறா மீன் துடுப்புகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சாகுல்ஹமீதை கைது செய்தனர். இந்த சுறா மீன் துடுப்புகளில் மருத்துவக் குணம் உள்ளதால் வெளிநாடுகளில் நட்சத்திர ஒட்டல்கள், பெரிய விருந்து நிகழ்ச்சிகளில், சூப் தயாரிக்க பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சுறா மீன் துடுப்புகளை பயன்படுத்தி உயிர் காக்கும் மருந்துகளும் தயாரிப்பதாக கூறப்படுகிறது. எனவே சுறா மீன் துடுப்புகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி இல்லாமல் இதனை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இதையடுத்து பாதுகாப்பு படை அதிகாரிகள் சுறா மீன் துடுப்புகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற சாகுல்ஹமீதை கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.