பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் இளம் வாக்காளர்களை இணையவழியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அகவை அடிப்படையிலான தோராய மக்கள் கணக்கீட்டின் (Age Cohort) படி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ள 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 20,547 ஆக உள்ளது. இவ்வெண்ணிக்கையினை இலக்காக வைத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளில் இளம் வாக்காளர்கள் எவரும் விடுபடாத வகையில் சேர்த்திட இச்சிறப்பு முகாம் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.
01.01.2024 ஆம் நாளன்று 18 வயது பூர்த்தியடையும் மாணவர்கள், அதாவது 31.12.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் கட்டாயம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை வாயிலாக அனுப்பப்படும். மேலும் 17 வயது நிரம்பிய அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது 18 வயது நிரம்பிய உடன்
தானாகவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை வாயிலாக அனுப்பப்படும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் – 2024ல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிப்பதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும். எனவே அனைவரும் இந்த இளம் வாக்காளர் சேர்ப்பு முகாமில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தியபால கங்காதரன், ரோவர் கல்வி குழுமங்களின் தாளாளர் வரதராஜன், தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.