பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன. இந்த பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
உள்ளாட்சி பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது. தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 5.1.2025ம் தேதியன்று நிறைவடைகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
அரசு இந்த செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை
25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* சென்னை, ஆவடி, திருவள்ளூர் உள்ளாட்சி விரிவாக்கம் விவரம்
பெருநகர சென்னை மாநகராட்சியானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66.72 லட்சம் மக்கள் தொகையையும், 426 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டதாகும். தற்போதுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன் திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.
* அதேபோன்று ஆவடி மாநகராட்சியுடன் பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகளும், கருணாகரச்சேரி, நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரவேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.
* திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் கிராம ஊராட்சி இனி கடம்பத்தூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோன்று சோழவரம் ஊராட்சி ஒன்றியம் பாடியநல்லூர் (பாடியநல்லூர் மற்றும் நல்லூர்) பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், புது கும்மிடிப்பூண்டி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இந்த ஊராட்சியில் பெருமளவு தொழிற்சாலைகளும், சிப்காட் தொழிற்பேட்டையும் அமைந்துள்ளது. சோழவரம் ஊராட்சி ஒன்றியம், மல்லியன்குப்பம் ஊராட்சி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசந்திராபுரம், சூரராஜப்பட்டடை ஊராட்சி பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* திருவள்ளூர் நகராட்சியுடன் சேலை (பகுதி), காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, திருப்பாச்சூர், சிறுவானூர், மேல்நல்லத்தூர், வெங்கத்தூர், பட்லூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.
* பொன்னேரி நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.
* திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.
* பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கப்படும்.
* திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி இணைப்பு.
* பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக உருவாக்கம்.
* கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.