மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவான் அரசு மருத்துவமனையில், பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், செவிலியர்களோ இல்லை என்றும் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் சிகிச்சைக்கு வந்த 16 பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களில் சிலர் பாம்பு கடி மற்றும் பல்வேறு நோய்களுக்காக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் என்று மருத்துவமனை முதல்வர் டாக்டர் வாக்கோடே தெரிவித்துள்ளார். இதனிடையே மராட்டியத்தில் கடந்த ஓராண்டாக மருத்துவம் உட்பட அனைத்து அரசு துறைகளும் முடங்கி கிடக்கின்றன. அரசு மருத்துவமனையில் 500 நோயாளிகளுக்கே இடமுள்ள நிலையில், 1200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதும் இறப்புக்கு காரணமாக கூறப்படும் நிலையில், இந்த துயர சம்பவம் துரதிஷ்ட வசமானது என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.