தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை, பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
பேராவூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை தலைமை வகித்து பேரணியைத் துவக்கி வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். “வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி நிறைவில், புதிய
வாக்காளர்கள் 10 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்,
“100 விழுக்காடு வாக்களிப்போம். 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக பதிவு செய்வோம். வாக்களிப்பது நமது உரிமை, நமது கடமை” என முழக்கங்கள் எழுப்பியவாறு, பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பேரணியில், கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கவிதா, தேர்தல் துணை வட்டாட்சியர் த.சரவணன், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்.ராஜ்மோகன், அகல்யா, வினோத் குமார், சதீஷ் குமார், ராஜேஷ், சீமா, அகிலா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.