கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 4 பேர் நடந்து வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள்,
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கிஷோர் (வயது 27), தினேஷ் (25), அஜய் பெலிக்ஸ் (25), ரத்தினபுரி சூர்யா (19) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், விற்பனைக்காக ஏராளமான போதை மாத்திரைகள் வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது,
கைதான 4 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை ரெயிலில் பார்சல் மூலம் கடத்தி வந்து உள்ளனர். இதில் முக்கிய நபர் ராஜஸ்தானில் உள்ளார். அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.