தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 50 வயதான முட்டை வியாபாரிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் பகுதிநேர வேலை, சிறிய அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று இருந்துள்ளது. இதை உண்மை என்று நம்பிய அந்த முட்டை வியாபாரி அந்த மெசேஜூடன் இருந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். தொடர்ந்து அந்த லிங்க் மற்றொரு சமூக வலைத்தளமான டெலிகிராமிற்கு சென்றுள்ளது. அப்போது முட்டை வியாபாரியின் செல்போன் எண்ணிற்கு பேசிய மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலைதான். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ஆன்லைன் டாஸ்கானது பிரபல விடுதிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களுக்கு தரம் அடிப்படையில் மதிப்பாய்வு செய்தல் போன்ற முறையில் இருக்கும். இதற்காக செய்யப்படும் முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த முட்டை வியாபாரி முதலில் ரூ.9 ஆயிரம் செலுத்தி டாஸ்க்கை செய்யத் தொடங்கி உள்ளார். அதில் ஒரு சிறிய லாபத்தொகை கிடைத்துள்ளது. இதேபோல் பல தவணைகளில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம், ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கான லாபத்தொகை கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த மர்மநபரை தொடர்பு கொண்ட முயன்ற போது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணும் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு விட்டது. இதனால் முட்டை வியாபாரி தான் ஏமாந்ததை உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.