சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 43 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடையாறு 20, செமீ, ஐஸ் அவுஸ் 19 செ.மீ. மழை பதிவானது. மழை, புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
மழை நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: நாளை முதல் மழை குறைந்து விடும் என எதிர்பார்க்கிறோம். மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்திருந்தபோதிலும், எதிர்பாராத அளவு மழை செய்ததாலும், வடிகால்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாலும் மழை நீர் வடிவதில் சிரமம் உள்ளது. கடல் சீற்றத்துடன் இருப்பதாலும், மழை நீரை கடல் உள்வாங்கவில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் அவ்வப்போது எங்களை தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டு வருகிறார். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.