Skip to content

தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..

  • by Authour

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக பாபநாசம் வேலு தலைமையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர்களை சந்தித்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை செய்ததில் அனைத்து அரசு மணல் குவாரிகளும் மற்றும் கிடங்குகளும் இயக்கப்படாமல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் லோடு எடுப்பதற்கு என்று வடிவமைக்கப்பட்ட சுமார் 20,000 மேற்பட்ட லாரிகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணல் குவாரி இயங்காததால் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலையில் செயற்கை மணல் எம்.சேண்டு மற்றும் பி.சேண்டு உற்பத்தியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக அதிக விலைக்கு விற்கின்றனர். சுமார் ரூபாய் 3000 இருந்த எம்.சேண்டு ரூபாய் 5000க்கும், பி.சேண்டு ரூபாய் 6000 தரம் இல்லாமல் பொதுமக்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விநியோகம் செய்கிறார்கள்.

அனைத்து கிரஷர் உரிமையாளர்களும் அவர்களாகவே சொந்தமாக லாரிகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் அரசு கட்டுமான வேலைகளுக்கும் கொண்டு செல்கின்றனர் இதனால் எங்களுக்கு வேலை வாய்ப்பு இன்றி தவிக்கிறோம். ஆகையால் எம்.சேண்டு, பி.சேண்டு, கிரஷர் பவுடர் கலந்தும் விற்பனை செய்கிறார்கள். இதனால் பொதுமக்களின் கட்டடங்களுக்கும் அரசு கட்டுமானங்களுக்கும் உறுதித் தன்மையில்லாமல் இருக்கிறது. தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாங்கிய கடனை கட்டாமலும் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி படிப்பை கொடுக்க முடியாமலும் மிகவும் திண்டாடி வருகிறோம் என்றனர்.

ஆகையால் எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று ஒரு சில தினங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால் வெளியிடாத பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரி உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து மணல் குவாரி திறக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கனிம வளங்களில் முறைகேடு நடப்பதாக கூறியுள்ளார் இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் எம். சாண்டு, பீ.சாண்டு போன்ற மணல்கள் உருவாக்கப்பட்டு அதிக அளவில் கனிமவளக் கொள்ளைகள் நடைபெற்றது. ஆகையால் தவறான தகவல்களை தேவையில்லாமல் பரப்ப கூடாது என்றனர்.

மேலும் மணல் அள்ளும் லாரிகளுக்கு அளிக்கப்படும் பாசில் முறைகேடுகள் நடப்பதாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மணல் லாரி உரிமையாளருக்கு இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.

error: Content is protected !!