சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை பிரிவு போன்றவை போலீஸாருக்கு கை கொடுக்கின்றன.
மேலும், போலீஸாருக்குப் பெரும் துணையாக உள்ளது துப்பறியும் நாய் படை பிரிவு. பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு உற்ற துணையாக மோப்ப நாய்கள் உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டறிதலில் நன்கு பயிற்சி பெற்ற சச்சின் என்ற மோப்பநாய் துப்பறிவு பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோப்ப நாய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மோப்ப நாய் பிரிவில் சக நாய்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு இந்த மோப்பநாய் உயிரிழந்தது.