நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது.இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் குவிந்து குப்பை மேடுகளாக காணப்பட்டது.
கடந்த ஆண்டு மலைக்கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் 42 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்ட நிலையில்,
நடப்பாண்டு 60 டன் குப்பைகள் தற்போது வரை சேகரிக்கப் பட்டுள்ளதாகவும்,
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் வீதிகளில் கடந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு சுமார் 1050 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில்,
இந்த ஆண்டு 1100 டன் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிகளில் அதிகளவு வணிக நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான தற்காலிக தரைக்கடை வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.
இதனால் மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, காந்தி மார்க்கெட் சாலை பகுதி என இப்பகுதியில் மட்டும் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் தற்போது தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து காணப்படும் குப்பை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளிலும், கடைகளிலும் தீபாவளி முன்னிட்டு சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளியை கொண்டாட முடியாவிட்டாலும் மக்களுக்காக குப்பைகளை அள்ளும் இந்த சேவையில் நாங்கள் மனநிறையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடவில்லை.நோய் வராமல் மக்களை பாதுகாக்க எங்கள் கடமையை நாங்கள் செய்து வருகிறோம். முடிந்த வரையிலும் குப்பைகளை வீசி எறியாமல் ஓரிடத்தில் சேகரித்து வைத்தால் மாநகராட்சி தூய்மை பணியாளர்களான நாங்கள் அதனை எடுத்துச் செல்ல சுலபமாக இருக்கும் என்று தூய்மை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.