அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்ததாவது…
நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படும் டிசம்பர்-7ஆம் நாளன்று அரசாசல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடிநாள் நிதி வசூல் துவக்கப்படுகிறது. எனவே நமது படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றிடும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடிநாள் வசூலில் தாராளமாக
நிதி வழங்கவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் 45 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.11,00,000/- மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ரூ.49,50,000/- ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.45,38,790/- நிதி வசூலித்த 92% சதவீதத்துடன் சாதனை எட்டியுள்ளது.
நடப்பாண்டின் 2024-க்கான இவ்வருடமும் கடந்த ஆண்டு போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துதுறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(மு.கூ.பொ) ம.கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலக பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.