சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அரசு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன், சிறுமி வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.
அப்போது மாணவிக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருமே 10-ம் வகுப்பு படிப்பதால் பாடம் தொடர்பான சந்தேகம் கேட்பதற்காக அடிக்கடி சந்தித்து பேசுகிறார்கள் என பெற்றோர்அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீறி போனது. 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் பெற்றோர் மற்றும் டாக்டர்கள், குழந்தை நல அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 2 பேருக்கும் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவரை கைது செய்வது குறித்தும் குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 2 பேரின் எதிர்காலம் கருதியும், சிறுமியின் உடல்நிலை கருதியும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்கள்.