பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில்12.625 பள்ளிகளைச்சேர்ந்த 8 லட்சத்து 94ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். 8 லட்சத்து 18ஆயிரத்து 743பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 12,625 பள்ளிகளில் 4105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 1364.
ஒட்டுமொத்தமாக 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் அரசு பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தை மட்டும் பார்த்தால் மிகவும் குறைவாக இருப்பது தெரியவருகிறது. அதாவது அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90%. ஆனால் சுயநிதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.43%
அரசு பள்ளிக்கும், சுயநிதி பள்ளிக்கும் தேர்ச்சி விகித வித்தியாசம் 9.53%. அதே நேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77% உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிக்கும் செல்லாமல், அரசு பள்ளிக்கும் செல்லாமல் இடையில் நிற்பது தெரி்கிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு எத்தனையோ சலுகைகள், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் இட ஒதுக்கீடு, கல்லூரி படிப்பில் சேர்ந்தால் மாதம் ரூ.1000 என எத்தனையோ சலுகைகள் அளிக்கிறது. ஆனால் அரசு பள்ளியின் கல்வித்தரம் என்னவோ இன்னும் உயரவில்லை.
அரசுபள்ளிகளில் மாணவர்கள் சேரவில்லை என்று ஒரு காலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வருத்தப்படுவார்கள். இன்று அந்த நிலை மாறி அரசின் பல்வேறு திட்டங்களால் இன்று அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. குறிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. அந்த அளவு மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் இன்னும் உயர்ந்ததாக தெரியவில்லை. அதன் எதிரொலியாகத்தான் தேர்ச்சி விகிதம் 87.90% ஆக இருக்கிறது. அதே நேரத்தில் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் போதிக்கும் சுயநிதி பள்ளிகளில் 97.43% தேர்ச்சி கிடைக்கிறது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவு ஏன் என்பதற்கு அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அரசு உத்தியோகம் என்று சொல்லிக்கொள்ளும் அந்த ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் ஏன் இப்படி பின் தங்குகிறது என்பதை சிந்திக்க வேண்டும். ஆசிரியர்கள் பற்றாக்குறையா, அல்லது லேப் உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லையா, வகுப்பறைகள் இல்லையா என்பதை ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் கண்டுபிடித்து சுயநிதி பள்ளிகள் சாதிப்பதை போல் இவர்களும் சாதித்து காட்ட வேண்டும், அப்போது தான் கல்விக்காக தமிழக அரசு செய்யும் நலத்திட்டங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் அது விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்று பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.