Skip to content

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது.

4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை தேர்வு மையத்துக்கு வந்ததும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள்  தேர்வினை பதற்றமின்றி எழுதும்படி அறிவுரைகள் வழங்கி தேர்வு அறைக்குள் அனுப்பி வைத்தனர். சில பள்ளிகளில்   பிரார்த்தனை நடத்தி  வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர்.

தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதோடு, அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ முயற்சி செய்யும் பள்ளி நிர்வாகத்தின் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், அங்கீகாரத்தினை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

error: Content is protected !!