தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் குணா, துணைச் செயலாளர் ஜேம்ஸ், இணைச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் பணிபுரியும் தொழிலாளர்களின் அயராத உழைப்பு தான். 108 ஆம்புலன்ஸ் சேவை பணியில் 6 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை முதுகெலும்பான தொழிலாளர்களை ஒப்பந்த பணியாளர்கள் முறையில் பணியமர்த்தி எவ்வித காரணமும் இல்லாமலும் விசாரணையும் இல்லாமல் பணிநீக்கம் செய்து சேவையை சீர்குலைக்கும் பணியை 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் செய்து வருகிறது. இதை உடன் நிறுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை ஒழித்து அனைத்து தொழிலாளர்களின் நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டும்.
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதில் பணி புரியும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்கள் சட்ட விதிகளின்படி 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.