Skip to content
Home » குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021-சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமானது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்,  உயர் மட்ட அதிகாரிகள் அளவில் பலமுறை ஆலோசனை நடத்தினார். பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். இதில் குடும்பத்தலைவி களுக்கு இந்த ஆண்டே மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள ஏஜென்சியால் தமிழகத்தில் வறுமை கோட்டில்  ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது. நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட் டிருந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆகியோரது பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிட்டுள்ளது. பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும்.

ஆனாலும் இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் தகுதியானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார். அதற்கான பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பத்தினருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் வரை 34.27 லட்சம் பேர் 9 பிரிவுகளின் கீழ் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஏ.ஏ.ஒய். கார்டுதாரர்களும் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். எனவே இவை அனைத்தையும் ஒப்பிட்டு தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்தில் சேர தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. எனவே விரைவில் தகுதியான இறுதி பட்டியல் தயாராகிவிடும். அதன் பிறகு முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று இதை இறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!