கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த முத்துரெங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (40). பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவருக்கு தாய், தந்தை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்று வாழ்ந்து வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாததால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை பெற்று உண்டு வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்பட்டதால் அந்த வருமானத்தை கொண்டு ஒரு வேலை வெளியில் சாப்பிட்டும், மருத்துவச் செலவையும் பார்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கைரேகை 100 நாள் வேலை திட்ட இயந்திரத்தில் பதிவாகவில்லை என்றும், ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தில் அவரை அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கிராமத்திலிருந்து பேருந்து மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவர், ஆட்சியரிடம் தனக்கு 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், தனக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் 1,500 ரூபாய் உதவித் தொகை போதுமானதாக இல்லாததால், 100 நாள் வேலை திட்டத்தில் தன்னை இணைக்க வேண்டும் என்றும், தன்னை போன்ற மாற்றுத் திறனாளிகள் வேலை பார்த்து வரும் நிலையில், தனக்கு மட்டும் தராமல் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.