சட்டமன்றத்தில் காவல் துறை, மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நடவடிக்கை போதவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் தோல்வியை தவிர்க்கும் முயற்சி. உள்துறை செயலாளர், டிஜிபியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைச்சர்களை அனுப்பி வைத்தோம்.
போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய சாவு தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. ஒருவர் கூட தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சாராய விற்பனை நடந்தால் மாவட்ட எஸ்.பி. தான் பொறுப்பேற்க வேண்டும். வழக்கு விசாரணையில் நாங்கள் எதை மதை்தோம். சிபிஐ விசாரணை கோருவதற்கு? சட்டமன்றத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு வருத்தம் தருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு நேரம் பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்பதை ஒப்பிட வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு தயாராக இருந்தும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. கூட்டணி கட்சிகளும் பாராட்டும் நேரத்தில் பாராட்டுகிறார்கள். விமர்சிக்கும் நேரத்தில் விமர்சிக்கிறார்கள். ஒருபக்கம் தோல்வி, ஒருபக்கம் சொந்த கட்சி பிரச்னை. இவற்றில் அதிமுக சிக்கி தவிக்கிறது.
கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளின் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 190 அறிவிப்புகளில் 179 நிறைவேற்றி உள்ளோம். கோடநாடு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய இண்டர் போல் உதவியை நாடி உள்ளோம். குற்றங்களை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும்.
காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தி உள்ளோம். குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பது அல்ல ,குற்ற எண்ணத்தைக் குறைப்பது தான் காவல்துறையின் பணியாக இருக்க வேண்டும்.வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஊர்க்காவல்படை ஆளிநர்கள் பணியின்போது இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தனிப்பிரிவின் 2 அலகுகள் புதிதாக உருவாக்கப்படும். பேரணாம்பட்டு காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்படும். சமயபுரத்தில் புதிய காவல் நிலையம் ஏற்படுத்தப்படும். காவலர் சீரமைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி ரூ.50 கோடியாக உயர்த்தப்படும். கிளாம்பாக்கம், ஏற்காட்டில் புதிய போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்படும். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக கட்டப்படும். கொளத்தூர், கேளம்பாக்கத்தில் மகளிர் போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்படும். 201 புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ₹5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.
மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மானிய கோரிக்கையில் 100 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டாார்.