நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் சாமிநாதன் பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் ஊராட்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக வேட்பாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரை அப்பகுதி மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது மக்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன் கூறும்போது : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. பத்தாண்டுகள் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். இப்போது ஜனநாயக அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. எனவே பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்ததால் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செய்திருக்க முடியும். ஆனால் உருப்படியாக எந்த திட்டங்களும் வரவில்லை. முதல்வர் கூறியது போல் நீங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என்பது போல தான் இந்த ஆட்சி இருந்தது. அதேபோல தற்போது சிலிண்டர் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வெறும்
ஐந்து அல்லது பத்து ரூபாய் விலை ஏற்றம் இருந்தாலே கூச்சலிட்டார்கள். ஆனால் தற்போது சிலிண்டர் ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதில் 100 ரூபாய் குறைத்து நாடகம் ஆடுகின்றனர். பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நாடு முழுவதும் 800 பேர் உயிரிழந்தனர். அதை தவிர வேறு எந்த விஷயமும் நடைபெறவில்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்கள் அதனால் அரசாங்கத்திற்கு என்ன நன்மை நடந்தது, மக்களுக்கு என்ன நன்மை நடந்தது. மாநில அரசுக்கு மக்கள் தொகை அடிப்படையில்
நிதியை பகிர்ந்து கொடுக்கும் குழுவை கலைத்தனர். அதில் என்ன நன்மை கிடைத்தது. ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர வேற எந்த சாதனையும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. அவர்களோடு இருந்த பங்காளி எடப்பாடி பழனிச்சாமி அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்தார். இப்போது கூட இரண்டு கட்சியினரும் வேட்பாளர்களை போடுகிறார்கள், ஆனால் அவர்களுக்குள் எந்த விமர்சனத்தையும் செய்து கொள்ள மாட்டார்கள். தற்போது அரசியல் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு வர வேண்டிய நிதியை மட்டும் கொடுத்தால் போதும் இன்னும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.