நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அந்த கூட்டணியில் இருந்து பலர் விலகி மீண்டும் சரத்பவார் அணிக்கு தாவி வருகிறார்கள். இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய கணிப்புபடி மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சரத்பவார், உத்தவ்தாக்கரே சிவசேனா கூட்டணி தான் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. இதனால் ஆளும் பாஜக கூட்டணிக்கு கிலி பிடித்து விட்டது. எனவே சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அக்கூட்டணி கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகையை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000மும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.8000மும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இளம் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மாநில அரசுக்கு செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பதை தெரிந்தும் வரக்கூடிய அரசு எப்படியும் கஷ்டப்படட்டும் என்ற எண்ணத்தில் ஷிண்டே இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாக மகாராஷ்டிரா அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.