சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்து மண்டல பூஜை தொடங்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு படை எடுத்து வருகின்றனர். மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி 6 ஆம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 5 ஆம் தேதி 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது.
மகரவிளக்கு பூஜைக்கு நான்கு நாட்களே இருப்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14 ஆம் தேதி 40 ஆயிரமாகவும், 15 ம் தேதி 5 ஆயிரமாகவும் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பம்பையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜனவரி 15 ஆம் தேதி அதாவது மகரவிளக்கு பூஜைக்கு மறுநாள் மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சுவாமியை தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் வரலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.