கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மேய்ச்சலுக்குப் பிறகு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார்.
இன்று காலை ஆடுகளை பட்டியிலிருந்து திறந்து விடுவதற்காக சென்று பார்த்த போது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 55 ஆடுகளில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த நிலையிலும், 5 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு
போராடிக் கொண்டிருந்தது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 1,50,000 ரூபாய் இருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
க.பரமத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இரவு நேரங்களில் பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளை கடந்த 2 மாதங்களில் இது 4வது சம்பவம் என்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக நேற்று அதே பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த நிலையில், இன்று 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.