கடந்த 17, 18-ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்திருந்தது. மேலும் நடுக்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பும்படியும் மீன்வளத்துறை வலியுறுத்தி இருந்தது.
அதன்படி தென் மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரைதிரும்பினர். இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர். இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்தது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளித்ததால் பத்து நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குள் சென்றனர். கடந்த 10 நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மீனவர்கள் இன்று மீண்டும் தங்கள் தொழிலுக்கு திரும்பி உள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.