10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, பிராங்கிளின், பாலா, யுவராஜா, வினோத், குமார், தமிழரசி, சாந்தி, ஐஸ்வர்யா உள்பட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் , கலெக்டர் அலுவலகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும் புதுக்கோட்டையில் 10அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாநில அளவில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வாயிலில்சங்க நிர்வாகி, வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர், வருவாய் ஆய்வாளர்
எஸ்.பரணீதரன், நகர்புற மாவட்ட இணைச்செயலாளர் எல்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளைவிளக்கி
பேசினர். இதேபோல ஆட்சியர் அலுவலகத்திலும் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிஙள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அலுவலகப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.