நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசும்போது, நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி தெரிவித்து உள்ளார். எனினும், கடன் பெற்றவர்கள் இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பில் தொடர்ந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் இந்த நடவடிக்கைகள் தொடரும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என மந்திரி கூறியுள்ளார். இந்த வாரா கடன்கள் திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடன்களின் வரிசையிலேயே வகைப்படுத்தப்படும். அவற்றை திருப்பி வசூலிக்கும் முயற்சியில் தொடர்புடைய வங்கிகள், வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும். தொடர்ந்து மந்திரி நிர்மலா கூறும்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் பொது துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடியை மீட்டெடுத்து உள்ளன. அவற்றில், வர்த்தக வங்கிகளின் கணக்கில் இருந்து இருப்பு நிலை அறிக்கைக்காக நீக்கப்பட்ட ரூ.1,03,045 கோடி கடன்களும் அடங்கும் என கூறியுள்ளார்.