வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, 8ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் 8,9ம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் எவ்வளவு பெரிய கனமழை வந்தாலும் அதை சமாளிக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கினால் உடனுக்குடன் அதை வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மழை, புயலால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்பு படையினர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மழைவெள்ளம் ஏற்பட்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருக்கும்படி தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், இன்று சென்னை தலைமை செயலகம் வந்து தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து மழை நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.