மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இரவிலும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் 3 பாஜ மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை அவர்கள் தீ வைத்து எரித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால், சிறு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன.
அந்த சமயத்தில் வீடுகளில் எம்எல்ஏக்கள் அவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எம்எல்ஏக்களின் வீடுகளை எரித்த கும்பல், இம்பாலின் கிழக்கில் உள்ள லுவாங்ஷாங்பாமில் உள்ள முதல்வர் பிரேன் சிங்கின் பூர்வீக வீட்டையும் தாக்க முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரம் வெடித்த இம்பாலின் 5 மாவட்டத்திலும் நேற்றும் பதற்றம் நீடித்தது. மேற்கு இம்பாலின் பாஜ எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது.தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதியிலிருந்து இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் இல்லாத பகுதியிலும் வன்முறைகள் பரவி வருகின்றன. உங்களை மணிப்பூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.