Skip to content
Home » மகாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணி வெற்றியின் ரகசியம்

மகாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணி வெற்றியின் ரகசியம்

மகாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணி வெற்றியின் ரகசியம்

கடந்த ஏப்ரல், மே மாதங்களில்  நடந்த  நாடாளுமன்ற தேர்தலில்  மகாராஷ்ட்ராவில்  ஆளும் பாஜக கூட்டணி  பெரும் தோல்வியை சந்தித்தது. ….. ஆம் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக வெறும் 17 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.   காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 30 தொகுதிகளை அள்ளியது.

சரியாக 6 மாதத்தில்  நடந்த  சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது.  கடந்த  20ம் தேதி மகாராஷ்ட்ரா சட்டமன்றத்துக்கு  பொதுத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையில்,   ஏக்நாத் ஷிண்டே , அஜித்பவார் ஆகியோர் அடங்கிய மகா யுதி கூட்டணியும், அதனை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றி வாகை சூடிய  காங்கிரஸ் தலைமையிலான  மகா விகாஸ் அகாடி கூட்டணியும் களத்தில் குதித்தன.

நாடாளுமன்ற தேர்தலைப்போலத்தான்  முடிவுகள் இருக்கும் என்று ஆரம்பத்தில் எல்லோரும் கணித்தனர்.  ஆனால் தோல்வியை கண்டு துவண்டு போன  பாஜக கூட்டணிக்கு  தெம்பு  ஊட்டியது என்னவோ தமிழகத்தின் திட்டம் தான்.

ஆம்…….. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  மாதம் ரூ.1000 வழங்கப்படுவதைப்போல, நாங்களும் மாதம் ரூ.1500 வழங்குவோம் என்று அறிவித்தது பாஜக கூட்டணி அரசு. அந்த திட்டத்துக்கு பெயர் முக்கிய மந்திரி  லாடுக்கி பகின் யோஜனா……. அதாவது முதல் மந்திரியின் அன்பான சகோதரி திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் என்ற கவிஞரின்  பாடல் வரிகளுக்கு ஏற்ப பாஜக அரசு விழித்துக்கொண்டது.   வர இருக்கும்  சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற என்ன செய்யலாம் என  யோசித்தது. அப்போது தான்  மகளிர் உரிமைத் தொகை நினைவில் வந்தது. நாமும் அதை செய்வோம் என  புதியதிட்டத்தை  முதல்வர் அறிவித்தார். 18வயது நிரம்பிய பெண்களுக்கு எல்லாம் ஜூலை மாதம் முதல்  ரூ.1500 வழங்கப்படும் என முதல்வர்  ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

ஆனால் இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கியது.ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு  அனைத்து 18 வயது நிரம்பிய பெண்களுக்கும் 1500 ரூபாய்  அரியர்சுடன் வழங்கப்பட்டது.  இது சுமார் 2 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மத்தியிலும் பாஜக ஆட்சி என்பதால் நிதியைப்பற்றி கவலையில்லாமல் வாரி விட்டனர். அத்துடன்  மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்  டிசம்பர் முதல் மாதம் 2100 வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்த திட்டம்  அனைவரையும் கவர்ந்தது. இதுவே பாஜக கூட்டணியின்  வெற்றியின் முதல்  காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் பாஜகவின் இந்த அதிரடி திட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் கூட்டணியும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அது  ஏனோ எடுபடவில்லை.   அன்பான சகோதரி திட்டத்தால் மகாராஷ்ட்ராவில் பாஜக மீண்டும் ஆட்சியை பெற்றது. அதுவும் முன்பை விட அதிக பலத்துடன்  வெற்றி பெற்று உள்ளது.  கிட்டத்தட்ட 215 இடங்களில் அந்த கூட்டணி வெற்றியை பெற்று உள்ளது.

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.  உத்தவ்  தாக்கரேயின் கொள்கை நீர்த்து போய்விட்டதாக மக்கள் கருதினர். மேலும் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே  முதல்வர் கனவுடன் இருந்தார். அதுவும் இப்போது கலைந்து போய்விட்டது.

கடந்த முறை வெற்றி பெற்ற நான்டெட் மக்களவை தொகுதிக்கு இப்போது நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்து உள்ளது.

அன்பான சகோதரிதிட்டம்  பாஜக கூட்டணிக்கு வெற்றியை பரிசாக அளித்துள்ளது.  வரும் திங்கள்கிழமை  பாஜக கூட்டணி  எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில்  பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!