பிதாமகன் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பாலாவுடன் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில், பாலாவுக்கும் சூர்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சர்ச்சையானது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான 2டி இதனை மறுத்து வந்த நிலையில், சூர்யா சிறுத்தை சிவாவுடன் புதிய படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். கதையில் நிகழ்ந்த மாற்றங்கள் சூர்யாவிற்கு உகந்ததாக இருக்குமா என அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பாலா, தன் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள சூர்யாவிற்கு தர்மசங்கடம் நேர்ந்துவிடக்கூடாது என்பதால் படத்தில் இருந்து அவர் விலகிக்கொள்வது என இருவரும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் வணங்கான் படப்பணிகள் தொடரும் என பாலா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இயக்குனர் பாலாவின் உணர்வுகளுக்கும், முடிவுகளுக்கும் மதிப்பளித்து வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக, 2டி நிறுவனம் மற்றும் நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.