பெரம்பலூர் எம்.பி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். லால்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கூகூரில் பாரிவேந்தர் ஓட்டு சேகாித்தார்.
அப்போது அங்குள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்தரையர் சிலையை வெண்கல சிலையாக மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட பாரிவேந்தர் தனது சொந்த செலவில், முத்தரையர் சிலையை வெண்கல சிலையை மாற்றித்தருவதாக கூறினார். தாளக்குடியில் தொடங்கி வாளாடி. நெருஞ்சலக்குடி, மாந்துறை,
பம்பரம்சுற்றி, திருமணமேடு, கூகூர், அன்பில், திண்ணியம், சிறுமயங்குடி, காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அன்பில் கிராமத்தில் உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரும்பாலான எம்.பிக்கள் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுத்துவதில்லை ஆனால் நான் முழுமையாக
தொகுதியை நிதியை பயன்படுத்தி உள்ளேன். கொரோனா நோய் தொற்று காரணத்தால் 2 ஆண்டுகள் நிதி இல்லாமல்
போனது. ஆனாலும் எனது சொந்த நிதியில் இருந்து கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு
செய்து வந்தேன். எனது நிதியில் பெரும்பாலும் மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு அரசு பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டிடம் குடிநீர் , ஆழ்துளை கிணறு ,கழிப்பிட கட்டிடம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாய விலை கடை கட்டிடம் சமுதாயக் கூடம் உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் 1500 குடும்பங்களுக்கு எனது சொந்த நிதியில் இலவச அவசர மேல் சிகிச்சை செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் தற்போது இந்த பகுதியில் வைத்துள்ள கோரிக்கையை மீண்டும் வெற்றி பெற்று நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார்.